ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பின், பாகிஸ்தான் தன் முதல் குடியரசு தினத்தை நேற்று, கொண்டாடியது.
வானில் விமான படை சாகசங்கள் புரிய, தரையில் கொடிகள் படபடக்க, 31 பீரங்கிகள் முழங்க, தாலிபான்களுக்கு எதிரான போரில், தன் பலத்தை காண்பிக்கும் அடையாளமாக பாகிஸ்தானின் குடியரசு தின கோலாகலங்கள் இருந்தன. சில மாதங்களுக்கு முன் தான், பாகிஸ்தானில் ஒரு பள்ளியில், 132 குழந்தைகளை பயங்கரவாதிகள் கொடூரமாக தாக்கி கொன்றனர். பயங்கரவாதிகள், மொபைல் போன் மூலம் குண்டுகளை இயக்கி வெடிக்கும், பல சம்பவங்கள் அங்கு நடந்திருப்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, மொபைல் போன் நெட்வொர்க்குகள் இயங்காமல் தடுக்கப்பட்டிருந்தன.
பாக்., ராணுவத்திற்கும், பாகிஸ்தானிய தாலிபான்களுக்கும் இடையே மோதல் வலுக்க ஆரம்பித்ததால், 2008லிருந்தே குடியரசு தின கொண்டாட்டத்தை பாகிஸ்தான் ராணுவம், நிறுத்தி வைத்திருந்தது. ஆனால், கைபர் மற்றும் வடக்கு வாஸிரிஸ்தான் உள்ளிட்ட ஆப்கானிஸ்தானின் கரடு முரடான எல்லைப் பகுதிகளில் பதுங்கியிருந்த கலகக்காரர்களை, போன ஆண்டு துவக்கத்திலிருந்தே கடும் நடவடிக்கைகள் மூலம் ஓட ஓட விரட்டியடித்து வருவதாக, பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கிறது.
குடியரசு தின விழா பேரணியில் பங்கேற்ற பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நாட்டை அழிக்க நினைக்கும் அரசுக்கு எதிரான சக்திகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுத்தார். ‘தாய்நாட்டை பாதுகாப்போம் என்று தேசத்தை நிறுவிய மூதாதையருக்கு நாம் அளித்த வாக்குறுதியை பாகிஸ்தான் நிச்சயம் கட்டிக்காக்கும்’ என, அந்த அறிக்கையில் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.