அணு சக்தி ஒப்பந்தத்தின் கீழ் ஈரானின் ராணுவத் தளங்களை சோதனையிட அனுமதிக்க முடியாது என்று தளபதி ஹுசேன் சலாமி தெரிவித்தார்.
ஈரான் ராணுவத்தின் பிரிவான புரட்சிக் காவல் படையின் துணைத் தலைமைப் பொறுப்பில் உள்ள தளபதி ஹுசேன் சலாமி தொலைக்காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
நாட்டின் ராணுவத் தளங்களை அன்னிய நாடுகள் சோதனையிட அனுமதிப்பது, ஆக்கிரமிப்புக்கு ஒப்பானது. ராணுவ ரகசியங்களைப் பார்வையிட அனுமதித்தால் அது நாட்டை விற்பதற்கு சமமாகிவிடும்.
உளவாளிகளின் சொர்க்கமாக ஈரான் மாறாது. எதிரிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தர இயலாது. ராணுவ ரகசியங்களை வெட்ட வெளிச்சமாக்க முடியாது. ராணுவம் தொடர்பான சிறிய இடத்தில் கூட சோதனையிடுவதை கனவிலும் அனுமதிக்க முடியாது.
ராணுவ தளத்தில் சோதனை என்ற பேச்சை எடுத்தாலே, அவர்களுக்கு சூடான ஈயத்தால் ஆன குண்டுகளைக் கொண்டு பதிலளிப்போம் என்று அவர் தெரிவித்தார்.
ஈரான் அணு ஆராய்ச்சி: அணு ஆயுதத் தயாரிப்புக்கான ஆராய்ச்சியில் ஈரான் ரகசியமாக ஈடுபட்டு வருகிறது என்று வல்லரசு நாடுகள் நீண்ட காலமாக கருதி வந்தன.
ஆனால் தங்களது அணு ஆராய்ச்சி, ஆக்கபூர்வமானது என்று அந்த நாடு கூறி வந்தது.
இந்த நிலையில், உலக நாடுகளின் நம்பிக்கையைப் பெறும் பொருட்டு, ஈரானின் பார்ச்சின் ராணுவ தளத்தில் சோதனை மேற்கொள்ள சர்வதேச அணு சக்தி அமைப்புக்கு 2005-ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் அன்னிய நாடுகள் உளவு பார்ப்பது தொடர்பான அச்சம் எழுந்ததால், அதன் பிறகு எந்த அமைப்புக்கும் சோதனை நடத்துவதற்கான அனுமதியை ஈரான் வழங்கவில்லை.
இதைத் தொடர்ந்து, அணு ஆயுதத் தயாரிப்பில் ஈரான் ரகசியமாக ஈடுபட்டுள்ளது என்ற அச்சம் உலக நாடுகளிடையே ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. தடைகளை நீக்குவது தொடர்பாக ஈரான்-வல்லரசு நாடுகள் கலந்து கொண்ட பேச்சு அண்மையில் நடந்து முடிந்தது.
பல்வேறு நிபந்தனைகளுடன், ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு அணு ஆராய்ச்சி மேற்கொள்வது தொடர்பாக ஈரானுக்கும் வல்லரசுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதன் கீழ், அணு சக்தி தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் அனைத்து இடங்களிலும், அதைத் தவிர, சந்தேகத்துக்குரிய எந்த இடத்திலும் சர்வதேச அணு சக்தி அமைப்பு சோதனை செய்ய உரிமை அளிக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை வரைவு அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது.
இவ்வாறு குறிப்பிட்டிருப்பதற்கு ஈரான் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. மேலும், சோதனைக்குப் பிறகுதான் பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்று குறிப்பிட்டிருப்பதற்கும் ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இறுதி ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே, பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும் என ஈரான் கூறி வருகிறது.