சீனா – பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 51 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாகின.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தையும் சீனாவின் மேற்குப் பகுதியையும் இணைக்கும் 3,000 கி.மீ. நீளமுள்ள சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பணியை முறைப்படி ஜீ ஜின்பிங் தொடங்கி வைத்தார்.
இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக அமைக்கப்படுகிறது. 3 ஆண்டுகளில் இது அமைக்கப்படும்.
முன்னதாக, காலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், அவரது மனைவி பெங் லியுவான் சிறப்பு விமானம் மூலம் ராவல்பிண்டி விமானப் படை விமான தளத்தில் வந்திறங்கினர்.
பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசேன், பிரதமர் நவாஸ் ஷெரீஃப், ராணுவத் தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப், மத்திய அமைச்சர்கள் விமான தளத்துக்கு நேரில் சென்று சீன அதிபரை வரவேற்றனர்.
இரு நாடுகளிடையே, எரிசக்தி, பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், 50 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3 லட்சம் கோடி) மதிப்பிலான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ராணுவத் தளவாடங்கள் வழங்குவது குறித்தும் ஒப்பந்தம் ஏற்பட்டது.
சீன அதிபரின் பாகிஸ்தான் பயணம் பல்வேறு முறை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இரு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவென்பது குறிப்பிடத் தக்கது. முன்னதாக, சீன அதிபரின் சிறப்பு விமானம், பாகிஸ்தான் வான் எல்லைக்குள் பிரவேசித்ததும், அதற்கு வழித்துணையாக பாகிஸ்தானின் ஜேஎஃப்-17 தண்டர் ஜெட் போர் விமானங்கள் உடன் பறந்து வந்தன.
ஜேஎஃப்-17 தண்டர் ஜெட் போர் விமானங்கள், சீனாவின் உதவியுடன் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை.
பாகிஸ்தானின் மிக உயரிய விருதான “நிஷான்-ஏ-பாகிஸ்தான்’, ஜீ ஜின்பிங்குக்கு வழங்கப் படவிருக்கிறது.