நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் அங்கு 39 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என ஐ.நா. சபை கணித்துள்ளது.
மீட்பு பணியில் நேபாள ராணுவமும், இந்திய ராணுவம் மற்றும் மீட்பு குழுவினரும் ஈடுபட்டனர். கூடாரங்கள், உலர்ந்த உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை பாதிக்கப்பட்ட கிராம புறங்களில் ஹெலிகாப்டர்கள் வீசி வருகின்றன. அங்கு வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தரை இறங்க வசதியுள்ள இடங்களில் ஹெலிகாப்டர்கள் இறக்கப்பட்டு கிராம மக்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப்படுகிறது. அங்கிருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.
இங்கிலாந்து, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் விமானங்களை அனுப்பி மீட்பு பணிக்கு உதவியுள்ளன. உணவு மற்றும் மீட்பு குழுவையும் வழங்கியுள்ளன.
இந்த நிலையில் நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா டெலிவிஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது கடும் பேரழிவை ஏற்படுத்திய பூகம்பத்தில் பலியான நேபாள மக்கள், வெளிநாட்டினர் மற்றும் குழந்தைகள், சகோதர, சகோதரிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பூகம்பத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று முதல் 3 நாள் துக்கம் கடை பிடிக்கப்படும் என தெரிவித்தார்.