இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆர்.சம்பந்தன், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தலைவர்களை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இலங்கையில் புதிய அரசு மேற்கொண்டு வரும் அமைதி நடவடிக்கைகள், நல்லிணக்கப் பணிகள் குறித்து கெர்ரியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இரண்டு நாள் பயணமாக, சனிக்கிழமை இலங்கை வந்தார். கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை வந்த முதல் வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவர், ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தை நிறைவு செய்யும் முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை இலங்கை வருமாறு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது என்று கெர்ரி கூறினார்.
கெர்ரியின் இந்தப் பயணம், இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக இங்குள்ள மக்கள் நினைக்கிறார்களா? என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்குப் பதிலளித்து கெர்ரி பேசியதாவது: எனது வருகையை இலங்கை மக்கள் வரவேற்கிறார்கள். அடுத்த வருகையை எதிர்பார்ப்பதாக என்னிடம் தெரிவித்தனர்.
வேறு எந்த நாட்டுடனும் அரசியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ இலங்கையிடம் அமெரிக்கா கூறவில்லை.
இலங்கையிடம் இருந்து அமெரிக்கா எதையும் கேட்கவில்லை.
இங்கு ஊழலற்ற ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா உதவி செய்கிறது.
சிறுபான்மைத் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று, சிறையில் உள்ள அரசியல் கைதிகளை இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, ஐ.நா. மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றுடன் இலங்கை அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று கெர்ரி கூறினார்.
முன்னதாக, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா ஆகியோரை சனிக்கிழமை கெர்ரி சந்தித்தார். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த புதிய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கெர்ரி பாராட்டு தெரிவித்தார்.