இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு சார்லோட் எலிசபத் டயானா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், கேம்ப்ரிட்ஜின் மதிப்புக்குரிய இளவரசி சார்லோட் என்று அவர் அழைக்கப்படுவார் எனவும் கென்சிங்டன் அரண்மனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்– டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம், ஸ்காட்லாந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, கேத் மிடில்டனை சந்தித்தார். இருவரும் காதலித்து, 29-4-2011 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியருக்கு கடந்த 22-07-2013 அன்று முதலில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தை இளவரசர் ஜார்ஜ் என்ற பெயரில் வளர்ந்து வருகிற நிலையில், இளவரசி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் காலை 8.34 மணிக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 3.700 கிலோ.
பிரசவம் முடிந்த சில மணி நேரத்துக்குள் குட்டி இளவரசியுடன் கென்சிங்டன் அரண்மனைக்கு வந்த இளவரசர் வில்லியம் தம்பதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டயானாவின் கணவரும் இங்கிலாந்து இளவரசருமான சார்லஸ் தனது பேத்தியை பார்த்து, கொஞ்சி மகிழ்ந்தார்.
இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு அரச குடும்பம் என்ன பெயர் வைக்கும்? என்பது தொடர்பாக அந்நாட்டு மக்களிடையே பல்வேறு யூகங்கள் நிலவிவந்த வேளையில் அந்தப் பெண் குழந்தைக்கு சார்லோட் எலிசபத் டயானா என இன்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், கேம்ப்ரிட்ஜின் மதிப்புக்குரிய இளவரசி சார்லோட் என்று அவர் அழைக்கப்படுவார் எனவும் கென்சிங்டன் அரண்மனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.