650 இடங்களை கொண்ட இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாளை காலை (உள்ளூர் நேரப்படி) 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிகிறது. உடனேயே ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.
இந்த தேர்தல் தொடர்பாக தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளிவந்தன. கடைசியாக வெளியான டி.என்.எஸ். கருத்துக்கணிப்பு முடிவு, ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு சாதகமாக உள்ளது. தொழிலாளர் கட்சியை விட அந்த கட்சி ஒரு சதவீத ஆதரவு அதிகம் பெற்றிருக்கிறது. கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்து ஆளுங்கட்சி முன்னணியில் உள்ளது.
அதே நேரத்தில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தற்போது இரு கட்சிகளின் ஆதரவும் தலா ஒரு சதவீதம் குறைந்துள்ளது. தற்போது ஆளும் கட்சியை 33 சதவீதம் பேரும், எதிர்க்கட்சியை 32 சதவீதம் பேரும் ஆதரிக்கிறார்கள். இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை தக்க வைக்குமா அல்லது தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்குமா என்பது வெள்ளிக்கிழமை தெரிந்து விடும்.