அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய புகாரின் பேரில், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய உதவியாளரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற சிறிசேனா, முந்தைய ராஜபக்சே ஆட்சியில் நடந்த ஊழல்
மற்றும் சட்ட விரோத செயல்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்படி முந்தைய ஆட்சியின் ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராஜபக்சேவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு முக்கிய அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் முக்கிய அம்சமாக ராஜபக்சேவின் இளைய சகோதரரும், முன்னாள் பொருளாதார மந்திரியுமான பசில் ராஜபக்சே, ஊழல் எதிர்ப்பு
படையினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது சகோதரரின் கைதால் பெரும் அதிர்ச்சியடைந்த ராஜபக்சே, தற்போதைய அரசு பழிவாங்கும் போக்குடன் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டினார். மேலும் தங்கள் குடும்பத்தினர் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் ராஜபக்சே ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் முக்கிய அதிகாரியாக செயல்பட்டு வந்தவர் சஜின் வாஸ் குணவர்த்தனே. ராஜபக்சேயின் நெருங்கிய உதவியாளரும், எம்.பி.யுமான இவர், இலங்கை அரசின் ஆதரவு பெற்ற மிகின் லங்கா விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாவார்.
இவர் கடந்த ஆட்சியின் போது அதிபரின் செயலக வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் சஜின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்ததை தொடர்ந்து அவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். பசில் ராஜபக்சேவை தொடர்ந்து, ராஜபக்சேவின் நெருங்கிய உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பது, இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.