இலங்கையின் பல்வேறு சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்யுமாறு அந்நாட்டு அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா, என்.தேவதாஸ் உள்ளிட்ட மீனவர்கள் குழுவினர், அதிபர் சிறீசேனாவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
பிறகு பிடிஐ செய்தியாளரிடம் ஜேசுராஜா கூறியதாவது:
இந்திய மீனவர்களின் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, மைத்ரிபாலா சிறீசேனாவை சந்தித்தோம். அப்போது, இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வதாக அதிபர் தெரிவித்தார்.
எனினும், இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்து வைத்துள்ள இந்திய மீனவர்களின் 25 படகுகள் குறித்து சிறீசேனா எதுவும் கூறவில்லை. மேலும், இரு நாட்டு மீனவர்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக, அதிகாரிகள் நிலையிலானகூட்டத்துக்கும், மீனவர்கள் நிலையிலான கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்வதாக சிறீசேனா ஒப்புக் கொண்டுள்ளார் என்றார் ஜேசுராஜா.
“இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி தாக்குதல் நடத்தி, கைது செய்து வருவதால், பாக் நீரிணை பகுதியில் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு இலங்கை அதிபரிடம் கோரிக்கை விடுத்தோம்’ என்று தேவதாஸ் கூறினார்.
1