மியான்மர், வங்கதேச நாடுகளிலிருந்து தஞ்சம் கேட்டு வந்த 800-க்கும் மேற்பட்ட அகதிகளை மலேசியா ஏற்க மறுத்ததால், அவர்கள் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய வங்கதேசத்திலிருந்தும், மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட மியான்மரிலிருந்தும், மலேசியாவில் தஞ்சம் கேட்டு ஆயிரக்கணக்கான அகதிகள் வருகின்றனர்.
தாய்லாந்து வழியாக மலேசியா செல்ல விரும்பும் அவர்களை சட்ட விரோதமான முறையில் கடத்தல்காரர்கள் படகு மூலம் அழைத்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில், கடத்தல்காரர்களால் மிக மோசமான முறையில் வைக்கப்பட்டிருந்த சில அகதிகளும், புதைக்கப்பட்ட அகதிகளின் பிணங்களும் தாய்லாந்தில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அகதிகள் கடத்தலுக்கு எதிராக மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அதன் காரணமாக, கடத்தல் படகுகளை ஓட்டி வந்தவர்கள் கைது நடவடிக்கைக்குப் பயந்து, ஆயிரக்கணக்கான அகதிகளை நடுக்கடலில் கைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் உணவு, குடிநீர்ப் பற்றாக்குறையால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அவதிப்படுவதாக மீட்கப்பட்ட அகதிகள் தெரிவித்தனர்.
கடலில் தவிக்கும் அகதிகளில் இதுவரை 1,600 பேரை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
எனினும், மேலும் 6,000 பேர் நடுக்கடலில் தொடர்ந்து தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மலேசியாவின் லாங்காவித் தீவுக்கு புதன் கிழமை வந்த 500 அகதிகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டதாகவும், அதற்குப் பிறகு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் மலேசிய உள்துறை இணையமைச்சர் வான் ஜுனைதி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
எங்கள் எல்லையைத் தாண்டி வரும் மக்களிடம் நாங்கள் கனிவுடன் நடந்து கொள்வோம்.
ஆனால் அதற்காக புற்றீசல் போல் அகதிகள் எங்கள் எல்லையை நோக்கிப் படையெடுப்பதை நாங்கள் அனுமதிக்க
முடியாது.
அவர்களுக்கு இங்கே வரவேற்பு கிடையாது என்பதை அனைவருக்கும் உணர்த்தவே 500 அகதிகளும் திருப்பி அனுப்பப்பட்டனர் என்றார் அவர்.
இதுதவிர, மேலும் 300 அகதிகள் லாங்காவித் தீவுக்கு அருகே திருப்பி அனுப்பப்பட்டதாக மலேசிய அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இதற்கிடையே, அகதிகளுக்குத் தஞ்சம் அளிக்கும்படி ஐ.நா. அகதிகள் உரிமை அமைப்பு வேண்டுகோள் விடுத்தும், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளும் அகதிகளை ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன.
4