அமெரிக்காவில் குயின்ஸ் நகரில் வசித்து வந்தவர் சுனந்தோசென் (வயது 46). இந்தியர். சொந்தமாக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அருகில் அச்சகம் நடத்தி வந்தார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி இரவு, குயின்ஸ் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தார். அப்போது அங்கே வந்த எரிகா மெனண்டஸ் என்ற 33 வயது அமெரிக்க பெண் சுனந்தோசென்னை ரெயில் வரும்போது திடீரென தள்ளிவிட்டார்.
ரெயிலில் அடிபட்ட சுனந்தோ சென் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனையடுத்து எரிகாவை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் அமெரிக்காவில் உள்ள சிறுபான்மையினர் மீது கொண்ட வெறுப்பு காரணமாக சுனந்தோசென்னை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
இந்த இனவெறி தாக்குதல் வழக்கு, நியூயார்க் குயின்ஸ் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது எரிகா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்தநிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தியரை ரெயிலில் தள்ளி கொன்ற எரிகாவுக்கு 24 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.