இலங்கை அமைச்சரவையில் வீட்டு வசதி அமைச்சராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான டிலான் பெரேராவும், பொது நிர்வாக அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும், சுற்றுச்சூழல் அமைச்சராக சி.பி. ரத்னாயக்கேவும், பாராளுமன்ற அலுவல்கள் பொறுப்பு அமைச்சராக மகிந்த யாப்பா அபேவர்த்தனேவும் பதவி வகித்து வந்தனர்.
இவர்கள் நான்கு பேரும் இன்று தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது ‘‘தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிப்பதால் எந்தவிதமான நன்மையும் ஏற்படாது என்றும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது’’ என்று கூறி தமது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
பதவி விலகிய அமைச்சர்கள் நால்வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள். மேலும், அதில் 3 பேர் முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளார்கள். இது தீவிர அரசியலுக்கு திரும்ப முயற்சித்து வரும் ராஜபக்சே முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.