இராக்கில் முன்னேறி வரும் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளை ஒடுக்க, அந்த நாட்டில் அமெரிக்க ராணுவத்தை மீண்டும் ஈடுபடுத்தும் திட்டமில்லை என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அந்த நாட்டின் மீது மீண்டும் ராணுவப் படையெடுப்பை நிகழ்த்த அதிபர் ஒபாமா விரும்பவில்லை. அவ்வாறு செய்வது அமெரிக்காவின் நன்மைக்கு நீண்ட கால நோக்கில் நன்மை பயக்காது.
இராக் படையினருக்கு, தங்கள் மண்ணை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் திறனை வளர்க்க உதவுவதுதான் அமெரிக்காவுக்கு நீண்ட கால நோக்கில் நன்மை பயக்கும். அந்த நடவடிக்கைகளைத்தான் அமெரிக்க அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.
இராக் ராணுவத்துக்குத் தேவையான உதவிகளை அமெரிக்காவும், 60 கூட்டணி நாடுகளும் செய்து வருகின்றன.
எதிரிகளை எதிர்கொள்ளும் வலிமையை இராக் படையினருக்கு அளிப்பதற்காக, அமெரிக்கா தலைமையில் அவர்களுக்கு ராணுவப் பயிற்சியும், போர் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி, சண்டையில் அவர்களுக்கு பக்கபலமாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல்கள் நிகழ்த்தி வருகின்றன.
இராக்கிலும், சிரியாவிலும் நேரடியாக வீரர்களை களம் இறக்குவதற்குப் பதிலாக, அங்குள்ள உள்ளூர் படையினருக்கு உதவியளிப்பதுதான் அரசின் கொள்கை என்றார்
ஜோஷ் எர்னஸ்ட்.
0