இலங்கையில், இந்திய கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து, காவல் துணை கண்காணிப்பாளரும், செய்தி தொடர்பாளருமான ரூவன் குணசேகரன் கூறியதாவது: கள்ள நோட்டு மாற்றும் கும்பலின் நடமாட்டம் குறித்து, போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கொழும்பு புறநகர் பகுதியைச் சேர்ந்த இருவர், நல்ல ரூபாய் நோட்டுக்கு, இந்திய கள்ள நோட்டு தர முயன்றபோது, போலீசார் கையில் சிக்கினர். அவர்களிடம் இருந்து, 1,000 ரூபாய் என அச்சடிக்கப்பட்ட, 181 இந்திய கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.