ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில், 11 இந்தியர்கள் இணைந்துள்ளதாக, ஐ.பி., எனப்படும் உளவு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம், ரகசிய அறிக்கை அளித்துள்ளது.
மகாராஷ்டிராவின் கல்யாண் நகரை சேர்ந்த ஆரிப் மஜீத் உள்ளிட்ட நான்கு பேர், கடந்த ஆண்டு, துருக்கி வழியாக, சிரியாவில் உள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்துள்ளனர். சிரியா போரில், ஆரிப்பிற்கு, மூன்று குண்டு காயங்கள் ஏற்பட்டதை அடுத்து, அவர், துருக்கி வழியாக, மும்பைக்கு திரும்பினார். விமான நிலையத்தில், ஆரிப் கைது செய்யப்பட்டு, அவர் மீது, சட்ட விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தவிர, பெங்களூரை சேர்ந்த பையஸ், கர்நாடகாவின் பத்கலை சேர்ந்த, ‘சிமி’ அமைப்பின் முன்னாள் தலைவர் அப்துல், கல்யாணை சேர்ந்த, ஷாஹிம் பரூக் ஆகியோரும், சிரியா சென்று, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்துஉள்ளனர். மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற,
ஐதராபாத் மாணவர் ஹனீப் வசீம் என்பவரும், பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளார். கடந்த மாதம் இவர், போரில் பலியாகி விட்டார். இந்த வகையில், இந்தியாவில் இருந்து பயங்கரவாத அமைப்பில் இணைந்த, 11 பேரில், தென்னிந்தியாவை சேர்ந்த, ஐந்து பேர், வளைகுடா நாடுகளில் உள்ளனர்.
சிரியாவில் போரிட்டு வரும் இந்தியர்களில் சிலருக்கு, தாய்நாட்டிற்கு திரும்பும் எண்ணம் உள்ளது. அவர்கள் இதை, தங்கள் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர்.
ஒருவர், போர் முனையில் இருந்து தப்ப முயற்சித்துள்ளார். ஆனால், அதில் வெற்றி பெறவில்லை. சிரியாவிற்கு, ஆட்களை மூளைச் சலவை செய்து அனுப்புவதற்கென்று, 35 ‘ஜிகாதி’ அமைப்புகள், இந்தியா வில் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில், அவை இயங்கி வருகின்றன. உளவுத் துறை, அந்த அமைப்புகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
உள்துறை அமைச்சகம், கடந்த பிப்ரவரி யில், ஐ.எஸ்.ஐ.எஸ்., உள்ளிட்ட சில, ‘ஜிகாதி’ அமைப்புகளின் இயக்கத்திற்கு தடை விதித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக, இந்தியர் யாரும், பயங்கரவாதிகள் அமைப்பில் சேரவில்லை என, உளவுத்துறை தெரிவித்துள்ளது.