ஐ.நா. வகுத்தளித்த தீர்மானத்தின் அடிப்படையில் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா முன்வர வேண்டும் என பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசேன் வலியுறுத்தினார்.
பாகிஸ்தானின் மூன்றாவது நாடாளுமன்ற ஆண்டின் தொடக்கத்தையொட்டி அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் மம்னூன் ஹுசேன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவுடன் பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய நட்புறவை ஏற்படுத்தவே பாகிஸ்தான் விரும்புகிறது.
அதற்கு முதலில் காஷ்மீர் விவகாரத்துக்கு இந்தியா தீர்வு காண்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையிலும், காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கேற்பவும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா முன்வர வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே, இந்தப் பிராந்தியத்தில் நீடித்த அமைதி உண்டாகும்.
சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை எந்தக் காரணமும் இல்லாமல் இந்தியா ரத்து செய்துவிட்டது.
ஆனால், பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.
எனவே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேர்மையுடனும், நல்ல நோக்கத்துடனும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாகிஸ்தானில் கடைக்கோடி பயங்கரவாதி ஒழியும் வரையில், பயங்கரவாதத்துக்கான எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றார் மம்னூன் ஹுசேன்.
பதிலடி கொடுக்க தயார்…: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு ராணுவத் தலைமை தளபதி ரஹீல் ஷெரீஃப் கூறினார்.
இதுகுறித்து இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவம் மிகவும் வலிமையாகி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் எந்த நடவடிக்கைகளையும் முறியடித்து தக்க பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது’ என்றார்.
முன்னதாக, பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதிதான் காஷ்மீர் என ரஹீல் ஷெரீஃப் புதன்கிழமை கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
3