கடந்த வாரம் 22 பணியாளர்களுடன் நடுக்கடலில் காணாமல் போன மலேசிய நாட்டு எண்ணெய்க் கப்பலை வியத்நாம் கடல் பகுதியில் கண்டறிந்ததாக அந்த நாட்டு கடற்படை வியாழக்கிழமை தெரிவித்தது.
அந்தக் கப்பல் கடத்தப்பட்டுள்ளதாகவும், கடத்தல்காரர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“ஆர்கிம் ஹார்மனி’ என்ற எண்ணெய்க் கப்பல், 1.5 கோடி ரிங்கிட் (ரூ.25.5 கோடி) மதிப்புடைய 75 லட்சம் லிட்டர் பெட்ரோலுடன் மலேசியாவின் மலாக்கா நகரிலிருந்து, குவான்டன் நகருக்குச் சென்று கொண்டிருந்தது.
மலேசியாவின் ஜோஹார் மாகாணத்தையொட்டிய கடல் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அந்தக் கப்பலுடனான தொடர்பு கடந்த 11-ஆம் தேதி துண்டிக்கப்பட்டது. அந்தக் கப்பல் கடத்தப்பட்டதாக மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, “ஆர்கிம் ஹார்மனி’ கப்பலைத் தேடும் பணியில் மலேசிய கடற்படை ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில், மலேசிய கடற்படைத் தளபதி அப்துல் அஜீஸ் ஜாஃபர் சுட்டுரை வலைதளத்தில் வியாழக்கிழமை கூறியதாவது: கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பலின் இருப்பிடத்தைக் கண்டறிந்துவிட்டோம். அந்தக் கப்பலை கடற்படை ரோந்துக் கப்பல் பின் தொடர்ந்து செல்கிறது.
கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பலில் குறைந்தது 8 கடத்தல்காரர்கள் உள்ளனர். அவர்களிடம் கைத்துப்பாக்கிகளும், பட்டாக் கத்திகளும் உள்ளன.
அவர்களுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, கடற்படையிடம் சரணடைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தோனேசிய மொழி உச்சரிப்புடன் அவர்கள் பேசி வருகின்றனர்.
கப்பலில் உள்ள 22 பணியாளர்களும் பத்திரமாக உள்ளனர் என்று அப்துல் அஜீஸ் குறிப்பிட்டார்.
மலேசியாவின் கோடா பாரு நகரிலிருது 370 கி.மீ. தொலைவில், வியத்நாமுக்குச் சொந்தமான கடல் பகுதியில் “ஆர்கிம் ஹார்மனி’ கப்பலை கடற்படைக் கப்பல் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடத்தல்காரர்கள் அந்தக் கப்பலுக்கு புதிய வர்ணம் பூசி, “கிம் ஹார்மன்’ என்று பெயர் மாற்றம் செய்திருப்பதாக கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியக் கடல் பகுதியில், கடந்த 2 ஆண்டுகளாகவே கடல் கொள்ளைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
0