கிழக்கு ஆப்பிரிக்க நாடான புரூண்டியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இதுவரை 77 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்பினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்த நாட்டு மனித உரிமை அமைப்பின் தலைவர் போனிம்பா கூறியதாவது:
புரூண்டியில் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடங்கிய கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை 77 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 1,000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.
நாடு முழுவதும் பயணம் செய்து, நேரடியாக ஆதாரங்களைத் திரட்டிய பிறகே இந்த எண்ணிக்கைகளை வெளியிடுகிறோம் என்றார் அவர்.
இந்தத் தகவலை காவல்துறை செய்தித் தொடர்பாளர் பியர் குரிகியே மறுத்தார்.
எனினும், போராட்டம் தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
புரூண்டியில், அதிபர் பியர் குருன்சிஸா மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் மிகக் கடுமையாக நடந்துகொள்வதாகக் கூறப்படுகிறது.
தலைநகர் புஜும்புராவில் மட்டும் போலீஸார் நடவடிக்கையில் 24 பேர் உயிரிழந்ததாகவும், 591 பேர் காயமடைந்ததாகவும் சர்வதேச செஞ்சிலுவை அமைப்பு தெரிவித்தது.