சீனா தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கு சட்டப்பூர்வ வரைமுறைகளை உருவாக்கும் ஒப்பந்தத்தில், இந்தியா உள்பட 50 நாடுகள் திங்கள்கிழமை கையெழுத்திட்டன.
இதுகுறித்து சீன அரசு ஊடகமான “ஜிங்ஹுவா’ திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆசிய நாடுகளின் உள்கட்டமைப்பு வசதித் திட்டங்களுக்கு உதவும் இந்த வங்கியின் நடைமுறைகள், கொள்கைத் திட்டங்கள், நாடுகளின் பங்கீடுகள் குறித்த ஒப்பந்தம், பெய்ஜிங்கில் கையெழுத்திடப்பட்டது.
இந்த வங்கிக்கு சீனா தலைமை வகிக்கும். ஒப்பந்தத்தில், ஆஸ்ரேலியா, இந்தியா உள்பட 50 நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர். இந்த ஆண்டின் இறுதியில், மேலும் 7 நாடுகள் கையெழுத்திடவுள்ளன.
இந்தியா சார்பில், சீனாவுக்கான தூதர் அசோக் காந்தா கையெழுத்திட்டார்.
ரூ. 6.37 லட்சம் கோடி (10,000 கோடி டாலர்) முதலீட்டில் ஏற்படுத்தப்படும் இந்த வங்கியில், ஆசிய நாடுகளின் பங்கு 75 சதவீதமாக இருக்கும். நாடுகளின் பொருளாதார வலிமை அடிப்படையில் ஒதுக்கீடுகள் அமையும்.
வங்கியில் சீனா, இந்தியா, ரஷியா ஆகிய நாடுகள் முறையே 30.34, 8.52, 6.66 சதவீத பங்குகளையும், 26.06, 7.5, 5.92 சதவீத வாக்குரிமைகளையும் கொண்டிருக்கும். மேலும், சில முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் சீனாவிடம் இருக்கும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றுக்குப் போட்டியாகக் கருதப்படும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி பற்றிய யோசனையை, கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சீன அதிபர் ஜி ஜிங்பிங் முன்வைத்தார். இதன் தலைமையகம் பெய்ஜிங்கில் செயல்படும்.
எனினும், முக்கிய நாடுகளான அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை இந்த நடவடிக்கையை எதிர்த்து வருகின்றன.
1