கடன் வழங்குவதற்கு ஐரோப்பிய நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கக் கூடாது என கிரீஸ் நாட்டின் பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ள நிலையில், அந்த நாட்டின் நிதியமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ் தனது பதவியை திங்கள்கிழமை
ராஜிநாமா செய்தார்.
பொது வாக்கெடுப்பின் முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள ஐரோப்பிய யூனியனை சமாதானப்படுத்தும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான விவாதங்களின்போது, கடன் நிபந்தனைகளை எதிர்த்து அவர் மிகக் கடுமையாகப் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியிலிருந்து விலகும் முடிவை தனது வலைப்பதிவுத் தளத்தில் திங்கள்கிழமை அறிவித்து, அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
கடன் வழங்குவதற்கான நிபந்தனைகளை அரசு ஏற்க வேண்டாம் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக இனி நடைபெறும் விவாதங்களில் நான் பங்கேற்பதை சில ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை என்று தெரிகிறது.
நான் ராஜிநாமா செய்தால் தற்போதைய பிரச்னைக்கு தீர்வு கிடைத்து, ஐரோப்பிய நாடுகளுக்கும், கிரீஸுக்கும் இடையே ஒப்பந்தம் உண்டாவதற்கு வழி ஏற்படும் என பிரதமர் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் கருதுகிறார்.
எனவே, நான் பதவி விலகுகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
யூரோ மதிப்பு உயர்வு: கடன் நிபந்தனைகளின் கடும் எதிர்ப்பாளரான யானிஸ் வரூஃபாகிஸ் பதவி விலகியடுத்து, கிரீஸுக்கு கடன் வழங்கும் ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஆணையம், பன்னாட்டு நிதியம் ஆகியவற்றுக்கும், கிரீஸ் நாட்டுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, யூரோ நாணயத்தின் மதிப்பு திங்கள்கிழமை உயர்ந்தது.
“இனி கிரீஸுடன் பேச ஒன்றுமில்லை’
பெர்லின், ஜூலை 6: வாக்கெடுப்புக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளை சமாதானப்படுத்தும் முகமாக கிரீஸ் நிதியமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ் பதவி விலகிய நிலையிலும், இனி கிரீஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐரோப்பிய யூனியனின் கடன் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என கிரீஸ் மக்கள் உறுதியாகக் கூறியுள்ளனர்.
எனவே, கடன் நிபந்தனைகள் குறித்து கிரீஸ் நாட்டுடன் பேசுவதற்கோ, புதிய கடனுதவி அளிப்பதற்கோ எந்த அடிப்படையும் இல்லை என்றார் அவர்.
ஜெர்மனி நிதியமைச்சக செய்தித் தொடர்பாளரும், “”கடனுதவி குறித்து கிரீஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை” என்றார்.
0