ஆப்கன் அரசு மற்றும் தலிபான் பிரதிநிதிகள், ரமலான் மாதத்திற்கு பின், மீண்டும் பேச்சு நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஆப்கனில் அராஜக ஆட்சி புரிந்த தலிபான்களை, அமெரிக்க கூட்டுப்படைகள், 2001ல் விரட்டி அடித்தன. இதையடுத்து, 2004ல் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று, அமீத் கர்சாய், அதிபராக பொறுப்பேற்றார். ஆனால், ஆப்கனில் அமைதியை விரும்பாத தலிபான்கள், பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் அரசுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். இதையடுத்து, இரு தரப்பிற்கும் இடையே அமைதி பேச்சு நடத்த, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முயற்சி மேற்கொண்டன. இதுவரை பல கட்டங்களாக, மறைமுக பேச்சு நடைபெற்று வந்த நிலையில், கடந்த, 7ம் தேதி, முதன் முதலாக அதிகாரபூர்வ பேச்சு நடைபெற்றது.
இஸ்லாமாபாத் அருகே, முரி என்ற மலைவாசஸ்தலத்தில், ஆப்கன் அரசு, தலிபான், பாக்., அமெரிக்கா மற்றும் சீன அரசு பிரதிநிதிகள் இந்த பேச்சில் கலந்து கொண்டனர். இதில் ஓரளவு முன்னேற்றம் எற்பட்ட நிலையில், ரமலான் மாதத்திற்குப் பின், மீண்டும் பேச்சு நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 13 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை, அமெரிக்கா, பாக்., சீனா ஆகிய நாடுகள் பாராட்டிஉள்ளன.