சீனாவில் 3 மணி நேரத்தில் 2 அடுக்கு மாடி வீடு கட்டி ஒரு கட்டுமான நிறுவனம் எல்லோரையும் வியக்க வைத்துள்ளது.
ஒரு வீடு கட்டி முடிப்பதற்கு குறைந்தது 6 மாத காலமாவது தேவைப்படும். ஆனால், சீனாவில், சான்ஸி மாகாணத்தில் ஸியான் என்ற இடத்தில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு கட்ட முடியும் என்று கட்டுமான நிறுவனம் ஒன்று சாதித்து காட்டியுள்ளது.
3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த வீட்டை கட்டியுள்ளது அந்த கட்டுமான நிறுவனம்.
அதி நவீன தொழில்நுட்ப முறையில் வீடு கட்ட சதுர மீட்டருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவழித்துள்ளது. இந்த வீடு சமையலறை, படுக்கையறை, ஓய்வு அறை மற்றும் ஹால் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டு கிரேன் மூலம் தூக்கி பொருத்தப்பட்டது.
தொழிற்சாலை மற்றும் விவசாய கழிவுகளை, மூலப் பொருட்களை வைத்து கட்டுமான பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. இது போன்ற வீடு கட்டுவதன் மூலம் போக்குவரத்து, ஆட்கள் கூலி, பொருட்கள் போன்றவற்றின் செலவு குறையும். கால நேரமும் மிச்சமாகும். 3 மணி நேரத்தில் 2 மாடிகளுடன் கட்டப்பட்ட இந்த வீடு 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டாலும் அதை தாங்க கூடிய வலிமை பெற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.