பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ படுகொலை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அதிபர் முஷாரஃப் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பேநசீர் புட்டோ 2007-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அப்போது பாகிஸ்தானின் அதிபராகப் பதவி வகித்தவர் பர்வேஸ் முஷாரஃப்.
2008-ஆம் ஆண்டு முஷாரஃப் பதவி விலகினார். 2010-இல் பேநசீர் படுகொலையில் முஷாரஃப் பெயர் தொடர்புபடுத்தப்பட்டது.
பாகிஸ்தான் உளவுத் துறையின் முன்னாள் தலைவர், முன்னாள் உள்துறைச் செயலர், தேசிய அவசரகால நிர்வாக மையத்தின் தலைவர், அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் இடைத்தரகர் ஆகியோரின் சாட்சியங்களின் அடிப்படையில் முஷாரஃப் மீது சதி வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாசரணையின்போது, முன்னாள் உள்துறைச் செயலர், தேசிய அவசரகால நிர்வாக மையத்தின் தலைவர் ஆகியோர், படுகொலையில் முஷாரஃபுக்குத் தொடர்பு இருப்பதாகத் தங்கள் வாக்குமூலத்தில் தெரிவிக்கவில்லை.
உளவுத் துறையின் முன்னாள் தலைவர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தேவையில்லை என்று அரசுத் தரப்பு முடிவு செய்தது.
அமெரிக்க அரசியல் இடைத் தரகரைப் பொருத்தவரையில், அவருக்கு பேநசீர் புட்டோ எழுதிய கடிதத்தின் அடிப்படையிலான சந்தர்ப்ப சாட்சியம் மட்டுமே அளிக்க இயலும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், அழுத்தமான சாட்சியங்கள் எதுவும் தனக்கு எதிராக இல்லை எனக் காரணம் காட்டி, முஷாரஃப் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படக் கூடும் என “தி டான்’ நாளிதழ் தெரிவித்துள்ளது
2