சிரியாவில் அமெரிக்கக் கூட்டுப் படையினர் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் அந்தப் பகுதிக்கான அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் முஷின் அல்-ஃபத்லி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
அமெரிக்காவிலும், அதன் நட்பு நாடுகளிலும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட அவர் திட்டம் தீட்டி வந்ததாக அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெஃப் டேவிஸ் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
அல்-காய்தா அமைப்பில் முஷின் அல்-ஃபாதி நீண்ட காலமாக செயல்பட்டு வந்தார்.
இந்த மாதம் 8-ஆம் தேதி கூட்டுப் படைகள் நிகழ்த்திய தாக்குலில் அவர் கொல்லப்பட்டதாக தற்பொழுது தெரிய வந்துள்ளது.
சிரியாவின் சர்மடா நகருக்கு அருகே, அவர் சென்ற வாகனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
அமெரிக்காவிலும், நட்பு நாடுகளிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்த சதித் திட்டம் தீட்டி வந்த அல்-காய்தாவின் “கொராஸான்’ பிரிவுக்கு அவர் தலைமை தாங்கி வந்தார்.
நியூயார்க் நகர இரட்டை கோபுரத் தாக்குதல் குறித்து முக்கிய விவரங்கள் அவருக்குத் தெரியும்.
அவர் கொல்லப்பட்டது, அமெரிக்காவுக்கும், நட்பு நாடுகளுக்கும் எதிரான அல்-காய்தாவின் சதிச் செயல்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றார் டேவிஸ்.
1