தென் சீன கடல் பகுதியில் உரிமை கொண்டாடுவதில் சீனா, ஜப்பான், கொரியா நாடுகளுக்கு இடையே பிரச்சினை உள்ளது. இப்பகுதி தங்களுக்கு மட்டுமே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடுகிறது.
இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் அங்கு சீனாவின் கடற்படை போர் பயிற்சி மேற் கொண்டுள்ளது.
அதில் 100 போர்க் கப்பல்கள், 50–க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், ஏராளமான ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. மற்றும் கணக்கிலடங்கா கடற்படை வீரர்களும், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இப்போர் பயிற்சி கடந்த சில நாட்களாக இங்கு நடந்து வருகிறது. இதனால் இங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் லியாங்யாங் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் ‘‘சர்வதேச விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப சீன கடற்படை இங்கு வழக்கமான போர்ப் பயற்சி மேற் கொண்டுள்ளது. இனி வரும் காலங்களில் இது தொடரும். எனவே சர்வதேச நாடுகள் தேவையின்றி தலையிடுவதை தவிர்க்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.