மியான்மரில் நவம்பர் மாதத்தில் நடைபெறும் பொதுத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூச்சி போட்டியிடுகிறார். இதற்காக தனது வேட்புமனுவை அவர் முறைப்படி தாக்கல் செய்துள்ளார்.
மியான்மர் அதிபர் தெயின் செயின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனையொட்டி புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் நவம்பர் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் சூச்சியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி 498 பாராளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.
தேர்தல் நடைபெற இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், காமு தொகுதியில் போட்டியிட உள்ள ஆங் சான் சூச்சி இன்று தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாகச் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆனால், திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றவில்லை.
1990ல் நடைபெற்ற மியான்மர் அதிபர் தேர்தலில் ஆங் சான் சூ வெற்றி பெற்றாலும் அந்தத் தேர்தல் முடிவுகள் ராணுவ ஆட்சியாளர்களால் ஏற்கப்படவில்லை. வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட ஆங் சான் சூச்சி பிறகு விடுவிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சி போட்டியிட அனுமதிக்கப்படாததால், தேர்தலை அக்கட்சி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.