இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூடில் ஒரு பெண் உயிரிழந்தார்.
மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
இலங்கையில் இம்மாதம் 17-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பிரசாரம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தலைநகர் கொழும்பில் நிதி அமைச்சர் ரவி கருணநாயக கலந்து கொண்ட பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அவர் பேசிவிட்டுச் சென்றவுடன், அப்பகுதிக்கு காரில் வந்த 4 நபர்கள் கூட்டத்தினரை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் முகமூடி அணிந்திருந்தனர்.
சுட்டுவிட்டு அந்த மர்ம நபர்கள் வந்த காரிலேயே ஏறித் தப்பிச் சென்றனர். அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியதால் அவர்கள் சுலபமாக அங்கிருந்து தப்பிச் சென்றனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த நபர் கூறினார்.
ஒரு சில நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்து முடிந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் பலியானார். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறு வன்முறை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
எனினும் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து, அதில் உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதல் முறை.
பிரசாரத்தின்போது பல்வேறு வன்முறை நிகழ்வுகளில் ஈடுபட்டதற்காக கடந்த இரு வாரங்களில் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6