அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அவரது மனைவியும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஹிலாரி ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளில் ஈட்டிய வருவாய் 13.90 கோடி டாலர் (சுமார் ரூ. 890 கோடி) என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2007-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை அவர்களுடைய வருவாய் குறித்து, அமெரிக்க வருமான வரித் துறைக்கு ஹிலாரி அளித்துள்ள அறிக்கைகளிலிருந்து இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.
அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி போட்டியிட ஆர்வம் தெரிவித்து, நாடு முழுவதும் கட்சியினரிடையே ஆதரவு திரட்டி வருகிறார்.
இதையடுத்து, கடந்த 8 ஆண்டுகளுக்கான அவரது வருமானம் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஹிலாரி வெளியிட்டுள்ளார்.
அதில் 139.1 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 890 கோடி) வருமானத்தை அவரும் அவரது கணவர் பில் கிளிண்டனும் பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வருவாயில் 35.7 சதவீத அளவை அமெரிக்க மத்திய அரசுக்கு அவர்கள் வரியாகச் செலுத்தினர். அதன் மதிப்பு 43 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 265 கோடி). மாகாண அரசுக்கு 13 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 83.20 கோடி) வரியாகச் செலுத்தியுள்ளனர்.
மொத்தத்தில் அவர்களது வருவாயில் 45.8 சதவீத அளவை வரியாகச் செலுத்தினர்.
தங்களது வருவாயில் 15 மில்லியன் டாலரை (சுமார் ரூ. 96 கோடி) நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு மட்டுமே தங்களது வருவாயில் 11 சதவீத அளவை பல்வேறு அமைப்புகளுக்கு நன்கொடையாக இருவரும் அளித்துள்ளனர்.
அவர்களது வருவாயின் கணிசமான பகுதியை, இருவரும் உருவாக்கியுள்ள கிளிண்டன் அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
அரசியல் ஆதாயம் எதிர்பார்த்து, இந்த அறக்கட்டளைக்கு வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான நன்கொடை குவிகிறது.
எந்தெந்த நடவடிக்கைகள் மூலமாக அவர் வருவாய் பெற்றார் என்பதை ஹிலாரி தனித்தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
பெருநிறுவனங்கள், ஆதரவாளர் குழுக்கள் ஆகியோரிடையே உரைகள் நிகழ்த்துவதன் மூலம் இதில் பெரும்பான்மையான தொகை கிடைத்தது.
பில் கிளிண்டன், 1993 முதல் 2001 வரை அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தார். அவரது மனைவி ஹிலாரி, 2009-2013 கால கட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
அமைச்சர் பதவியிலிருந்து ஹிலாரி விலகிய பின்னர், பெருநிறுவனங்கள் ஏற்பாடு செய்த சிறப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டு தலைமைப் பண்பு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றி வருகிறார்.
அதன் மூலம் பெரும் பொருள் ஈட்டி வருகிறார்.
மேலும், ஹிலாரி, பில் கிளிண்டன் எழுதிய புத்தகங்களின் விற்பனை மூலம் பெரும் தொகையை சம்பாதித்து வருகின்றனர்.
2000-ஆம் ஆண்டு முதல் சிறப்புரையாற்றுவதன் மூலம் மட்டுமே இருவரும் ரூ. 320 கோடி சம்பாதித்திருப்பர் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
அந்தக் கால கட்டத்துக்கான வருமானத்திலிருந்து, ஆண்டு சராசரியாக 31.6 சதவீதத் தொகையை வருமான வரியாக அவர்கள் செலுத்தினர்.