நேபாளத்தில் மாகாண எல்லை வரையறுத்தல் திட்டத்தின் கீழ், 6 மாகாணங்கள் அமைப்பது தொடர்பாக அந்நாட்டின் முக்கியக் கட்சிகளிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
நேபாளத்தில் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அந்நாட்டில் கூட்டாட்சி அமையும் விதமாக, மாகாண எல்லைகளை வரையறுக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மாகாணங்களுக்குப் புதிய பெயர், தலைநகரை இறுதி செய்யவும் முக்கியக் கட்சிகளிடையே நடைபெற்ற ஆலோசனை சனிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்தது. இது குறித்து துணைப் பிரதமரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான பிரகாஷ் மான்சிங் தெரிவித்ததாவது:
மாகாண எல்லைகள் குறித்து முக்கிய அரசியல் கட்சிகளுக்குள் உடன்படிக்கை ஏற்பட்டது. நேபாள அரசியல் சட்டமியற்றுதலில் முக்கியக் கட்டத்தை அடைந்துள்ளோம்.
கூட்டாட்சி முறையில் செயல்படும் விதமாக, 6 மாகாணங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றுக்கான பெயர்கள், தலைநகர்கள் பின்னர் முடிவு செய்யப்படும். இப்போதைக்கு அவற்றுக்கு எண்கள் அளிக்கப்பட்டுள்ளன. 6 மாகாணங்களும் இந்திய எல்லையையொட்டி அமைகின்றன என்றார்.
தலைநகரில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நேபாளி காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பிரிவு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – மாவோயிஸ்ட் பிரிவு, மாதேசி மக்கள் உரிமை இயக்கம் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் சுசீல்குமார் கொய்ராலா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த பேச்சவார்த்தையில், மாகாண எல்லை வரையறுத்தல், மாகாணங்களுக்கான புதிய பெயர்கள் ஆகியவற்றில் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து, அரசியல் சட்ட மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றும் முயற்சி கைவிடப்பட்டது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் வாக்குடன் அரசியல் சட்ட மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரகாஷ் மான்சிங் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 6 மாகாணங்கள் அமைப்பதில் முக்கியக் கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. தலைநகர் காத்மாண்டு அமைந்துள்ள இடம் “எண் – 2′ மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தைத் தவிர, மற்ற மாகாணங்களில், உயர்ந்த மலைப்பகுதி, குன்றுப் பகுதி, சமவெளி என 3 நிலப்பரப்புகளும் அமையும் விதமாக மாகாண எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளன.
தற்போது 5 வளர்ச்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள அந்த நாட்டில், உள்பிரிவுகளாக 14 மண்டலங்களும், 75 மாவட்டங்களும் உள்ளன.
9