நேபாளத்தில் புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுக்க தொடங்கியுள்ளன. நேற்று நாட்டின் பல இடங்களில் போலீசாரின் தடையை போராட்டங்கள் வெடித்தன. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். நேபாள நாட்டின் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்துள்ளது. இதை தொடர்ந்து புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணி 7 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. நேபாளத்தில் உள்ள 4 முக்கிய அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால் வரைவு சட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தை பயங்கர பூகம்பம் தாக்கியது. இது நேபாளத்தை புரட்டி போட்டது.
இதை தொடர்ந்து புதிய அரசியல் சட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்தது. இந்த மாத இறுதியில் வரைவு சட்டதுக்கு நேபாள நாடாளுமன்றம் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசியல் அமைப்பு சட்டத்தில் நேபாள நாடு மத சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தவிர நேபாள நாடு 6 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. நேபாள நாட்டை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என சில தரப்பினரும், பெண்களுக்கு சமஉரிமை வேண்டும் என பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்களும், 6 மாகாணமாக பிரிக்கப்பட்டதை எதிர்த்து சில பிரிவினரும் போராட தொடங்கியுள்ளன.
நேற்று நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி மற்றும் ரப்பர் புல்லட் துப்பாக்கி சூடு நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.