இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அந்நாட்டுப் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்கிறார்.
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவும் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 29 இடங்களுக்கு கட்சிகள் தேர்தலில் பெற்ற வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபட்ச இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை மாலை வெளியாகின.
மொத்தமுள்ள 225 இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் 93 இடங்கள் நேரடியாக வெற்றி பெற்றவை; 13 இடங்கள் வாக்கு விகிதாசார அடிப்படையில் கிடைத்தவை. இதேபோல், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு 95 இடங்கள் கிடைத்துள்ளன.
இதில் 83 இடங்கள் நேரடியாக வெற்றி பெற்றவை; 12 இடங்கள் வாக்கு விகிதாசார அடிப்படையில் கிடைத்தவை. ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிக்கு 6 இடங்கள் (வாக்கு விகிதாசாரபடி கிடைத்த 2 இடங்களையும் சேர்த்து) கிடைத்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 16 இடங்கள் (வாக்கு விகிதாசாரபடி கிடைத்த 2 இடங்களையும் சேர்த்து) கிடைத்துள்ளன. இதுதவிர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓரிடம் கிடைத்துள்ளது.
இலங்கையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 இடங்கள் கிடைத்துள்ளன. தனிப்பெரும்பான்மைக்கு இன்னும் 7 இடங்கள் தேவை.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி பெற்றுள்ள நிலையில், இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்கிறார். இதன் பின்னர், அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்ச தோல்வியடைந்தார். அதையடுத்து, அவரது அரசியல் வாழ்க்கை நிறைவடைந்ததாகக் கருதப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட ராஜபட்ச விருப்பம் தெரிவித்தார்.
கட்சித் தலைவரான அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா முதலில் அதற்கு அனுமதி மறுத்தாலும், கட்சியினரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, தேர்தலில் ராஜபட்ச போட்டியிடுவதற்கு அனுமதியளித்தார்.
எனினும், “நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றி பெற்றாலும், ராஜபட்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட மாட்டாது’ என்று சிறீசேனா உறுதிபடத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
6