ஆஸ்திரேலிய நாட்டின், புதிய தென் வேல்ஸ் பகுதியில் மேற்புற திறப்பு (டாப் லோடர்) இருக்கும் வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக் கொண்டு மூன்று மணி நேரம் தத்தளித்த வாலிபரை தீயணைப்புத் துறையினர் காப்பாற்றினர்.
இதனை தீயணைப்புத் துறை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இதுவரை தாம் செய்திராத வகையில் முதல்முறையாக வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக் கொண்ட வாலிபரை காப்பாற்றிய அனுபவத்தை அதில் பகிர்ந்து கொண்டது. வாஷிங் மெஷினின் வெளிப்பகுதியை முற்றிலுமாக நீக்கிவிட்டு பின்னர் அதன் டிரம்மை உடைத்தெடுத்து, அவரை காப்பாற்றியுள்ளனர்.
மொத்த வாஷிங் மெஷினும், அக்கு வேறு, ஆணி வேறாய் பிரித்தெடுக்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டார். அதை விட்டு வெளியே வந்ததும் இடுப்புப் பகுதியில் சுளுக்கு பிடித்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார். அவர் வாஷிங் மெஷினுக்குள் ஏன் இறங்கினார் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.