ஏமன் நாட்டில் நடந்த போரில், இதுவரை, 400 சிறுவர், சிறுமியர் பலியாகி உள்ளதாக, ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு ஆசியாவில், அரபு தீபகற்பத்தில் உள்ள, இரண்டாவது பெரிய நாடு ஏமன்.
இந்நாட்டில், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் ஹாதியின் அரசு படைகளுக்கும் இடையே, உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் இறுதியில், அரசு படைகளுக்கு ஆதரவாக, சவுதி அரேபிய கூட்டுப் படைகள் போரில் குதித்தன. அது முதல், கடந்த வாரம் வரை, இப்போரில், 398 சிறுவர்கள் பலியாகி உள்ளனர். 13 லட்சம் பேர் உயிர் பிழைக்க, வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அதே சமயம், இதே காலத்தில், போர் புரிவதற்காக, 377 சிறுவர்கள் படையில் சேர்க்கப்பட்டுள்ளதாக, ஐ.நா., குழந்தைகள் நல நிதியமான, ‘யூனிசெப்’ தெரிவித்துள்ளது. ஏமன் கிளர்ச்சியாளர்களும், அரசு படையினரும், போர் விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என்று, மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டி உள்ளன. ஏமன் போர் குற்றங்கள் குறித்து, ஐ.நா., விசாரணை நடத்த வேண்டும் என்று, சர்வதேச பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.