வட கொரியா – தென் கொரியா நாடுகளிடையே எழுந்துள்ள போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
எல்லைக் கிராமமான பான்முன்ஜோமில் சனிக்கிழமை 10 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை, ஞாயிற்றுக்கிழமை 15 மணி நேரத்துக்குத் தொடர்ந்தது.
பேச்சுவார்த்தையைக் குலைக்கும் வகையில் வட கொரியா எறிகுண்டுப் படைப் பிரிவை எல்லையில் குவிப்பதாக இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின்போது தென் கொரியா குற்றம் சாட்டியது.
தங்களது வீரர் காயமடைவதற்குக் காரணமான கண்ணி வெடியை புதைத்து வைத்ததற்காக வட கொரியா மன்னிப்பு கேட்கும்வரை சர்ச்சைக்குரிய ஒலிபெருக்கிப் பிரசாரத்தைத் தொடர்வோம் எனவும் தென் கொரியா கூறியது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்தது.
வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான ராணுவம் நீக்கப்பட்ட பகுதியில், வட கொரியா புதைத்து வைத்த கண்ணி வெடியில் சிக்கி தங்கள் நாட்டு வீரர் காயமடைந்ததாக தென் கொரியா குற்றம் சாட்டியது.
இதையடுத்து, எல்லைப் பகுதியில் சக்தி வாய்ந்த ஒலிபெருக்கிகளைக் கொண்டு வட கொரிய அரசுக்கு எதிரான பிரசாரத்தை தென் கொரியா பரப்பியது.
அதனைத் தொடர்ந்து, தென் கொரியா மீது வட கொரியா ஏவுகணை வீசியதாகவும், அதற்குப் பதிலடியாக தென் கொரியா எறிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தியதாகவும் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து கொரியத் தீபகற்பம் போரின் விளிம்புக்குத் தள்ளப்பட்டது.
பிரசார ஒலிபெருக்கிகளை அகற்ற வட கொரியா விதித்திருந்த கெடு முடிந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சனிக்கிழமை பேச்சுவார்த்தை தொடங்கியது.
1