உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளுக்கு கூடுதல் சுயாட்சி வழங்கும் அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை நிகழ்ந்த வன்முறையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
141 பேர் காயமடைந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் காவல்படையைச் சேர்ந்தவர்கள்.
காயமடைந்தவர்களில் 10 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வன்முறைக்கு தீவிர தேசியவாதிகளே காரணம் என உக்ரைன் பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ரஷியாவும், அதன் கையாட்களும் உக்ரைனுக்கு அழிவை ஏற்படுத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவு தருவதாகக் கூறிக் கொள்ளும் அரசியல் சக்திகள், நாட்டுக்கு எதிராக மற்றொரு திசையிலிருந்து போர் தொடங்கியுள்ளனர்.
வன்முறையைத் தூண்டிவிட்டு, தேசத்தின் முதுகில் குத்திய சமூக விரோதிகள் கடுமையான தண்டனைக்குரியவர்கள் என்றார் அவர்.
இந்த வன்முறைச் சம்பவம் குறித்து ஐரோப்பிய யூனியன் அமைப்பும், ரஷியா, ஜெர்மனி ஆகிய நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத் துறைத் தலைவர் ஃபெடரிகா மோகேரினி கூறுகையில், “உக்ரைனில் திங்கள்கிழமை நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த கவலை அளிப்பவையாக உள்ளன’ என்று தெரிவித்தார்.
கீவ் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்குக் கண்டனம் தெரிவிப்பதாக ரஷிய அதிபர் விளாதீமிர் புதினின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
எந்தச் சூழலிலும் வன்முறை ஏற்றக்கொள்ள முடியாதது.
அதிலும், ஜனநாயக நாடாளுமன்றத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபடுவது மிகவும் மோசமான செயலாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக கடந்த ஆண்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
இதன் காரணமாக விக்டர் யானுகோவிச் பதவி விலகியதைத் தொடர்ந்து, ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே உள்நாட்டுச் சண்டை மூண்டது.
ரஷிய மொழி பேசுவோர் பெரும்பான்மையாக வசிக்கும் கிழக்கு உக்ரைன் பகுதியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
இந்தச் சூழலில், உக்ரைன் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக உக்ரைன், ரஷியா, கிளர்ச்சியாளர்களிடையே பெலாரஸ் நாட்டுத் தலைநகர் மின்ஸ்கில் கடந்த ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு அம்சமாக, கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள கிழக்கு உக்ரைன் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு கூடுதல் சுயாட்சி வழங்க உக்ரைன் அரசு ஒப்புக் கொண்டது.
இது உக்ரைன் நலன்களுக்கு எதிரானது என அந்த நாட்டில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், கிளர்ச்சிப் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பான மசோதா உக்ரைன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
0