ஸ்பெயின் நாட்டில் இன்று நடைபெற்ற கார் ரேசில் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடிய கார்களில் ஒன்று சாலையோரமாக நின்றிருந்த கூட்டத்துக்குள் புகுந்து மோதிய விபத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் உள்பட ஆறு பேர் பரிதாபமாக பலியாகினர்.
வடமேற்கு ஸ்பெயினில் உள்ள கரால் பகுதியில் இன்று ‘லா கோருனா’ கார் ரேஸ் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பல கார்கள் சாலையில் படுவேகமாக சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தன. விறுவிறுப்பான இந்த ரேசை பார்க்க சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான மக்கள் ஆவலுடன் நின்றிருந்தனர்.
ஒரு குறுகலான வளைவில் கார்கள் ஒன்றையொன்று முந்திச் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஒருகார், சாலையோரமாக நின்றிருந்த மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்தது. கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண் உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
படுகாயம் அடைந்த பதினைந்துக்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். இந்த துயர சம்பவத்துக்கு ஸ்பெயின் பிரதமர் மரியானோ ராஜாய் இரங்கல் தெரிவித்துள்ளார்.