சிரியா அகதிகளுக்கு ஆஸ்திரேலியா புகலிடம் அளிக்கும் என்று பிரதமர் டோனி அபோட் தெரிவித்தார்.
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது:
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு சிரியாவைவிட்டு வெளியேறி வரும் அகதிகள் நிலை உலகையே உலுக்கி வருகிறது.
ஐ.நா. முகாம்களில் உள்ள குழந்தைகள், பெண்களின் அவல நிலையை ஆஸ்திரேலியா மனிதாபிமான உணர்வோடு பார்க்க கடமைப்பட்டுள்ளது.
அகதிகளுக்கு கணிசமான அளவில் ஆஸ்திரேலியாவில் புகலிடம் அளிப்பதாக அரசு ஏற்கெனவே முடிவு செய்துள்ளது.
ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அகதிகளை ஏற்கும் திட்டத்தின் கீழ், 2015-16 ஆண்டில் 13,750 அகதிகளுக்குப் புகலிடம் அளிக்க அரசு திட்டமிட்டிருந்தது.
கடந்த சில மாதங்களாக சிரியா, இராக் அகதிகள் பிரச்னை வலுவடைந்து வருகிறது.
இது சர்வதேச பெரும் பிரச்னையாக உருவாகும் முன்பே, அடுத்த ஆண்டு 16,250 பேருக்கும், அதற்கு அடுத்த ஆண்டில் 18,750 பேருக்கும் புகலிடம் அளிக்க அரசு திட்டமிட்டிருப்பதை நாடாளுமன்றத்திலேயே அறிவித்துள்ளேன்.
கடந்த ஜூலை மாதத்திலிருந்து சிரியா அகதிகள், ஆஸ்திரேலியாவில் புகலிடம் அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததைவிட, இந்த ஆண்டு கூடுதலான எண்ணிக்கையில் புகலிடம் அளிப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது.
மக்கள்தொகை சராசரியை வைத்துக் கணக்கிடும்போது, மற்ற நாடுகளைவிட ஆஸ்திரேலியாவில் அதிகமான எண்ணிக்கையில் அகதிகளுக்குத் தஞ்சம் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்பதை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எத்தனை பேருக்குப் புகலிடம் அளிப்பது என்பது குறித்து செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று டோனி அபோட் தெரிவித்தார்.
திட்டமிட்ட எண்ணிக்கையைவிடக் கூடுதல் அகதிகளுக்குப் புகலிடம் அளிப்பது ஆஸ்திரேலியாவின் கடமை என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கூறி வரும் நிலையில், பிரதமர் டோனி அபோட் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.
கூடுதல் அகதிகளுக்கு அடைக்கலம்: நியூஸிலாந்து அறிவிப்பு
வெலிங்டன், செப். 7: திட்டமிட்டதைவிடக் கூடுதல் எண்ணிக்கையில் அகதிகளுக்கு நியூஸிலாந்தில் அடைக்கலம் அளிக்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜான் கீ திங்கள்கிழமை தெரிவித்தார்.
தலைநகர் வெலிங்டனில் அவர் கூறியதாவது: நியூஸிலாந்து ஆண்டுதோறும் 750 அகதிகளை ஏற்று வருகிறது. 1987-ஆம் ஆண்டிலிருந்து இதில் மாற்றம் எதுவும் இல்லை.
கடந்த சில நாட்களில் சிரியா அகதிகள் விவகாரம் பெரும் மனிதாபிமானப் பிரச்னையாக மாறியுள்ளது.
எனவே நியூஸிலாந்தின் வழக்கமான அகதிகள் ஏற்பு எண்ணிக்கையைவிடக் கூடுதலாக 600 பேருக்குப் புகலிடம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் படிப்படியாக கூடுதல் எண்ணிக்கையில் அகதிகளுக்குப் புகலிடம் அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
0