இராக்கில் சட்டத் துறை இணையமைச்சர் அப்துல் கரீம் ஃபரேஸ் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
பாக்தாத் நகரின் பினூக் பகுதியில் அமைச்சர் அப்துல் கரீம் ஃபரேஸ் சென்று கொண்டிருந்த வாகனத்தை, ஏராளமான வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் தடுத்து நிறுத்தினர்.
கறுப்பு முகமூடி அணிந்து வந்திருந்த அவர்கள் துப்பாக்கி முனையில் அமைச்சரைக் கடத்திச் சென்றனர்.
அவர்களைத் தடுக்க முயன்ற அமைச்சரின் ஓட்டுநரை அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில், அவருக்குக் காயம் ஏற்பட்டது என்று போலீஸார் கூறினர்.
பினூக் பகுதியில், கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த 18 துருக்கியர்களை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற நான்கு நாள்களில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த இரு சம்பவங்களிலும், ஆள்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்த மர்மம் நீடித்து வருகிறது.
2