சிரியாவில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்வது அதிகரித்து வருகிறது. உயிரைப் பணயம் வைத்து வரும் அவர்களுக்கு பல்வேறு நாடுகள் புகலிடம் அளித்து உதவி செய்து வருகின்றன. ஆனால், அமெரிக்கா இந்த விஷயத்தில் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டில் குறைந்தது 10 ஆயிரம் சிரிய அகதிகளை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க அந்நாட்டு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிரிய அகதிகளை அனுமதிப்பதற்கான நடைமுறைகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
சிரியாவில் போர் தொடங்கியது முதல் இதுவரை 1500 சிரிய அகதிகள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 300 பேர் அனுமதி பெற்றுள்ளனர். அவர்கள் அக்டோபர் 1-ம் தேதிக்குள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 75 ஆயிரம் அகதிகளை அமெரிக்கா அனுமதிக்கிறது. அந்த வகையில், அக்டோபர் 1-ம் தேதி தொடங்க உள்ள அடுத்த நிதியாண்டில் 10 ஆயிரம் சிரிய அகதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.