நேபாளத்தை 7 மாகாணங்களாகப் பிரிக்கும் புதிய அரசியல் சாசனம், ஏழு ஆண்டு கால முயற்சிக்குப் பிறகு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேறியது.
இந்தப் புதிய அரசியல் சாசனம் மீது, 601 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் புதன்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. நேபாளத்தின் எல்லைகளை மறு வரையறை செய்வதற்கு சிறிய இனக் குழுக்களைச் சேர்ந்த கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், கூட்டத்தில் கலந்து கொண்ட 532 உறுப்பினர்களில், புதிய அரசியல் சாசனத்துக்கு ஆதரவாக, 507 உறுப்பினர்களும், எதிராக 25 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
நேபாள காங்கிரஸ், சிபிஎன்-யுஎம்எல், யுசிபிஎன்-மாவோயிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஹிந்து பாரம்பரிய, அரசு குடும்பத்தினரின் ஆதரவு பெற்ற ஆர்.பி.பி.என். கட்சி உறுப்பினர்கள் புதிய அரசியல் சாசனத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
மாதேஸ் கட்சிகளைச் சேர்ந்த 60 உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். வாக்கெடுப்பில் புதிய அரசியல் சாசனம் வெற்றி பெற்றதை அவைத் தலைவர் சுபாஷ் நெம்வாங் அறிவித்ததையடுத்து, உறுப்பினர்கள் தங்களது கரங்களை உயர்த்தி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
இந்தப் புதிய அரசியல் சாசனம் சட்டமாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அவைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட வேண்டும். எனவே, உறுப்பினர்கள் அனைவரும் வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்திடுமாறு அவைத் தலைவர் சுபாஷ் நெம்வாங் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, வரும் 20-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில், புதிய அரசியல் சாசனத்தை அதிபர் ராம் பரண் யாதவ் முறைப்படி அறிவிப்பார்.
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக, வரும் 20, 21-ஆம் தேதிகளில் பொது விடுமுறை அறிவிக்க நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.
2