பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், விமானப் படைக்குச் சொந்தமான விமான தளத்தில் தலிபான் தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய துணிகரத் தாக்குதலில் விமானப் படை வீரர்கள் 23 பேர், ராணுவ வீரர்கள் மூவர் உள்பட 42 பேர் உயிரிழந்தனர்.
பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் தாக்குதல் நிகழ்த்திய 13 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெஷாவரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் விமானப் படைக்குச் சொந்தமான விமான தளம் அமைந்துள்ளது.
இந்த விமான தளத்துக்கு, ராணுவ உடையணிந்து வெள்ளிக்கிழமை வந்த தலிபான் தற்கொலைப் படையினர் ஏவுகணைகள், சிறிய ரக பீரங்கிகள், ஏ.கே.47 ரகத் துப்பாக்கிகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்குதல் நிகழ்த்தினர். விமான தளத்தின் நுழைவு வாயிலில் தாக்குதல் நடத்தி, அந்தப்
பகுதிக்குள் நுழைய முயன்றனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆஸிம் பாஜ்வா “சுட்டுரை’ (டுவிட்டர்) வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
விமான தள வளாகத்தின் இரு முனைகளிலிருந்து தாக்குதல் நிகழ்த்தி பயங்கரவாதிகள் உள்ளே நுழைந்தனர். பிறகு, தனிக் குழுக்களாகப் பிரிந்து தாக்குதல் நடத்தினர்.
வளாகத்துக்குள் அமைந்துள்ள மசூதியில் அப்போது தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தனர். அப்போது நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையில், 13 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சண்டையில் பொதுமக்களில் 3 பேர் உயிரிழந்தனர்.
பயங்கரவாதிகள் தாக்குதலில் விமானப்படை வீரர்கள் 23 பேரும், ராணுவ வீரர்கள் 3 பேரும் கொல்லப்பட்டனர்.
தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதி ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 10 ராணுவத்தினர் உள்பட 22 பேர் காயமடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலிபான்கள் பொறுப்பேற்பு: இந்தத் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது குராஸனி கூறியதாவது:
எங்களது தற்கொலைப் படைப் பிரிவு பெஷாவரின் பதாபெர் விமான தளத்தில் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.
அங்கிருக்கும் 80 பாதுகாப்புப் படையினரை எங்களது அமைப்பினர் சுற்றி வளைத்து, அதில் 50 பேரைக் கொன்றுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமான தளத் தாக்குதல் தொடர்பாக நிகழ்த்தப்பட்ட சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான பதாபெர் விமான தளத்தில் விமானங்கள் இயக்கப்படுவது நீண்டகாலம் முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது.
1