சிரியாவில் ரஷிய ஆளில்லா விமானங்களை முதல் முறையாக புதன்கிழமை இயக்கியதாக சிரியா ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அவை கூறியதாவது:
ரஷியாவிடமிருந்து பெற்ற ஆளில்லா விமானங்களை சிரியா ராணுவம் முதல்முறையாகப் பயன்படுத்தியது.
நாட்டின் வடக்கு மற்று கிழக்குப் பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், அந்த ஆளில்லா விமானங்கள் உளவு விமானங்களா அல்லது தாக்குதல் விமானங்களா என்ற விவரத்தை அவை தெரிவிக்கவில்லை.
அண்மைக் காலமாக சிரியாவில் ரஷியா தனது ஆயுதங்களைக் குவித்து வருவதாக அமெரிக்கா கவலை தெரிவித்து வந்த நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. சிரியா ராணுவத்துக்கு 5 போர் விமானங்களை ரஷியா வழங்கியுள்ளதாக வியாழக்கிழமை கூறப்பட்டது.
மேலும் டெய்ர் எஸ்ஸோர் நகரில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷிய ஆயுதங்கள் பயன்படுத்தப் படுவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், ரஷிய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கியதாக சிரியா ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது, சிரியா போரில் ரஷியாவின் ஆயுதங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதை உறுதி செய்வதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
0