சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மீது ரஷிய போர் விமானங்கள் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தின.
சிரியா அரசுக்கு எதிரான போரின் போது பொதுமக்களை கிளர்ச்சியாளர்கள் கொலை செய்வதாகக் கூறி, ரஷியா தனது முதலாவது தாக்குதலை புதன்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் 4 நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ரஷியா தெரிவித்தது.
பயங்கரவாதிகளின் தலைமை அலுவலகம், ஆயுதக் கிடங்கு, கட்டுப்பாட்டு அறை, கார் வெடிகுண்டு ஆலை ஆகியவை தங்களுடைய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன என்று ரஷியா தெரிவிக்கிறது.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு: இதனிடையே, சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக அவசர பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷியாவுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் விமானங்கள் சிரியாவில் ஏற்கெனவே தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ரஷியா விமானங்கள் பறக்கும்போது குழப்பம் அல்லது மோதல் ஏற்படும் என அமெரிக்கா கருதுகிறது.
இதையடுத்து, விமானங்கள் எங்கெங்கு பறக்கின்றன என்ற தகவல் பரிமாற்றம் மேற்கொள்வது குறித்து ரஷியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
0