சிரியாவில் கடந்த 24 மணிநேரமாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு சொந்தமான 9 முக்கிய நிலைகள் மீது ரஷ்யாவின் சுகோய் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதில், ராக்காவுக்கு அருகே உள்ள ஐ.எஸ். தலைமை நிலை முற்றிலுமாக தரைமட்டமானது.
குறிப்பாக, சுகோய்-34 ரக போர் விமானங்கள் கான்கீரீட்டை கூட துவம்சம் செய்து பொடிப்பொடியாக்கும் BETAB-500 ரக குண்டுகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகமுள்ள ராக்கா பகுதி மீது வீசியது. இந்த வீடியோவை ரஷ்ய ராணுவம் இன்று வெளியிட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் ஏற்கனவே வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை அங்கு பதுக்கி வைத்திருந்ததாகவும், அதன் மீது குண்டுகள் வீசப்பட்டதால் பெரும் அழிவு ஏற்பட்டதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சிரியாவின் வடமேற்கு பகுதியில் இத்லிப் மாகாண எல்லையில் அமைந்துள்ள ஜிசர் அல்-சுகுர் நகரத்தில் மலைப்பகுதியில் வெடிபொருட்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்ததாகவும், அதை ரஷ்யா தனது சுகோய்-24 ரக குண்டு வீசும் போர் விமானங்களால் தாக்கி அழித்துள்ளதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் தொடர்ந்து ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ரஷ்ய ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.