ஈராக், சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கில் ராணுவத்துக்கு எதிராக தீவிர சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இரு நாடுகளிலும், தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு அபு பக்கர் அல் பகாதி என்பவரை தலைவராக நியமித்து உள்ளனர்.
இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தளபதிகள் பங்கேற்கும் கூட்டம் அன்பார் மாகாணத்தில் உள்ள கர்பலா நகரில் நடைபெறுவதாகவும், இதில் கலந்து கொள்வதற்காக அல் பகாதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வந்திருப்பதாகவும் ஈராக்கிய படைகளுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து ஈராக் போர் விமானங்கள் கூட்டம் நடந்ததாக கூறப்படும் வீடுகள் மீது குண்டுகளை வீசி தாக்கின. இதில், தீவிரவாத இயக்கத்தின் தளபதிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்த தாக்குதலில் அல் பகாதியின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. சம்பவ இடத்தில் இருந்து அவரை ரகசியமான இடத்துக்கு தீவிரவாதிகள் கொண்டு சென்றுவிட்டதாகவும் ஈராக் ராணுவம் கூறுகிறது.
எனினும், இந்த தாக்குதலில் அல்பகாதி சிக்கியதாக கூறப்படுவது பற்றி எந்த அறிகுறியும் தெரியவரவில்லை என்று ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐ.எஸ். தீவிரவாதிகளும் இத்தகவலை மறுத்து உள்ளனர்.