ஆசிரியராகப் பணிபுரிபவர்கள் எப்போதும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டும், புதுப்புது மாணவர்களுடன் பழகிக் கொண்டும் இருப்பதன் மூலமாக எந்நாளுமே இளமையாக இருப்பர்! தனது இளமையான யோசனையால் ஒரு ஆசிரியை மாணவர்களின் மனதைத் தொட்டிருக்கின்றார்.
நெதர்லாந்தின் ‘க்ரோயன் ஹார்ட் ரிஜ்ன்வூட் பள்ளியில்’ ஏழு ஆண்டுகளாக உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி வரும் டெபி ஹீர்க்கென்ஸ் தனது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும்படி உயிரியல் பாடத்தை எடுக்க விரும்பினார்.
தனது நகரில் எலும்புக்கூடைப்போல வடிவமைக்கப்பட்ட பேண்ட்களை பெண்கள் அணிந்துபோவதை, டெபி அவ்வப்போது கவனித்திருக்கிறார். இதைப் பயன்படுத்தி தமது மாணவர்களுக்கு பாடம் எடுக்க விரும்பிய டெபி, தனது இத்தகைய யோசனையை பள்ளியின் தலைவரிடம் கூறி சமீபத்தில் அனுமதியும் பெற்றார்.
இந்த விவரங்கள் எதையும் மாணவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. கடந்த வாரத்தில் ஒருநாள், வகுப்பு நேரத்தில் திடீரென மேசை மீது ஏறிய டெபி, மாணவர்கள் முன்னர் தனது மேலாடையைக் களைந்தார். அதிர்ச்சியுடன் அவரைக் கவனித்து வந்த மாணவர்கள் அந்த உடைக்குள் அவர் அணிந்திருந்த எலும்புக்கூடு மற்றும் உடல் உறுப்புகள் சார்ந்த உடைகளைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
பிறகென்ன வாழ்நாளில் மாணவர்கள் மறக்க முடியாத உயிரியல் பாடத்தை டெபி எடுத்தார். இதனை வீடியோவாகப் பதிவு செய்து பள்ளி நிர்வாகம் தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது. தற்போது, உலகின் லட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்த ஆசிரியராகியுள்ளார் டெபி ஹீர்க்கென்ஸ்!