தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று பர்மா என்றழைக்கப்பட்டு வந்த மியான்மர் ஆகும். இந்த நாடு 1948-ம் ஆண்டு, ஜனவரி 4-ந் தேதி இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது. அந்த நாள் முதல் கூடுதல் சுயாட்சி கேட்டு பல்வேறு போராளிக்குழுக்கள், ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வந்தன. இது மியான்மர் அரசுக்கு பெருத்த தலைவலியாக அமைந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு போராளி குழுக்களுடன் மியான்மர் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் 15 குழுக்களில் 7 குழுக்கள் கலந்து கொள்ளவில்லை. ஐக்கிய வா மாகாண ராணுவம், கச்சின் சுதந்திர அமைப்பு உள்ளிட்ட குழுக்கள் பேச்சுவார்த்தையை புறக்கணித்தன. 8 குழுக்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டன.
இந்த பேச்சு வார்த்தையில் சமரசம் காண வேண்டும் என்ற முனைப்பில் பேச்சுவார்த்தைக்கு வந்த கரேன் தேசிய விடுதலை முன்னணி அமைதி கவுன்சில், அராக்கன் விடுதலை கட்சி, சின் தேசிய முன்னணி, பாவோ தேசிய விடுதலை அமைப்பு, ஜனநாயக கரேன் கருணை ராணுவம் ஆகியவை சட்டவிரோத அமைப்புகள் பட்டியலில் இருந்து கடந்த வாரம் நீக்கப்பட்டன.
தொடர்ந்து அனைத்து பர்மா மாணவர்கள் ஜனநாயக முன்னணி, ஷான் மாகாண மீட்பு கவுன்சில், கரேன் தேசிய யூனியன் ஆகிய 3 அமைப்புகளும் கடந்த 12-ந் தேதி சட்டவிரோத அமைப்புகள் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டன.
இந்த நிலையில்தான் 8 குழுக்களுடன், நேற்று உடன்பாடு எட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மியான்மரில் அரசியல் தீர்வு காண்பதற்கு இந்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் முதல் படியாக அமையும் என அந்த நாட்டு அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இனி அடுத்தகட்டமாக, புதிய கூட்டாட்சி முறை பற்றிய விவாதங்கள் நடத்தப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.