பிரிட்டனில் 112 வயதான பெண்ணுக்கு இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அளித்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
பிரிட்டனிலேயே மிக வயதானவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் கிளாடிஸ் ஹூப்பர். இவருக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அவர் வசிக்கும் ஐல் ஆஃப் வைட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை இவருக்கு அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில், அவரால் எழுந்து தனியாக நிற்க முடிகிறது என்று அவருடைய 84 வயது மகன் டெரிக் கூறினார்.
112 வயதில் இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை பெற்ற மிக வயதானவர் கிளாடிஸ் ஹூப்பர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தனது அம்மாவுக்கு இந்த முதிய வயதில் இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அளித்த மருத்துவர்களின் துணிச்சல் பாராட்டத்தக்கது என்றும் தனது தாய்க்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்றும் டெரிக் மேலும் கூறினார்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வெடுத்து வரும் கிளாடிஸ் ஹூப்பர் இன்னும் நடக்கத் தொடங்கவில்லை. இசைக் கலைஞரான அவர் இசை கேட்பதிலும் அரட்டையிலும் பொழுதுபோக்கி வருகிறார். அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் ஜேசன் மில்லிங்டன் கூறியதாவது:
இவ்வளவு வயதானவருக்கு அறுவைச் சிகிச்சைக்கான மயக்க மருந்து அளிப்பது, இடுப்பு மாற்று சிகிச்சை அளிப்பது ஆகியவற்றில் ஆபத்து எதுவும் இல்லை.
இந்த முதிய வயதில் இடுப்பு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பின்னர், அவருடைய பொதுவான உடல் நலத்துக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிதான் நாம் கவலை கொள்ள வேண்டும்.அதனால் அவருடைய தினசரி வாழ்க்கையில் உடலில் ஏற்படக் கூடிய அழுத்தத்தை எவ்வாறு குறைக்க முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
2