நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்ட சிறுமிக்கு, மருத்துவர் என்ற முறையில் உருகுவே அதிபர் தபாரே வாஸ்குயிஸ் சிகிச்சையளித்து உதவினார். இதுதொடர்பாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஜோஸ் லூயிஸ் வெய்கா, கூறியதாவது:
அதிபர் தபாரே வாஸ்குயிஸ், அரசு முறை பயணமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு கடந்த திங்கள்கிழமை விமானத்தில் சென்றபோது இச்சம்பவம் நடைபெற்றது.
அந்த விமானத்திலிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
அதையடுத்து, விமானத்தில் மருத்துவர் யாராவது இருக்கிறீர்களா? என ஒலிப்பெருக்கி வாயிலாக விமானி கேட்டார். அப்போது, மருத்துவர் என்ற முறையில் வாஸ்குயிஸும், அவரது மருத்துவக் குழுவும் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர், சிறுமியின் உடல்நிலை சீரானது. ஹாக்கி வீராங்கனையான அந்த சிறுமி, அர்ஜென்டினாவில் நடைபெற்ற போட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். போட்டியின்போது அவர் சாப்பிட்ட உணவால் ஒவ்வாமை ஏற்பட்டு, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருக்காவிட்டால் அந்த சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றார் ஜோஸ் லூயிஸ்.
1