மதேசிகளின் போராட்டத்தால் இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல ஏற்பட்டுள்ள தடையை நீக்க முயற்சி மேற்கொள்ளுமாறு, ஐ.நா.பொதுச் செயலாளர் பான்-கி-மூன் அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.
நேபாள நாட்டுக்கு புதிய அரசியல் சாசனம் அண்மையில் இயற்றப்பட்டது. அது, மதேசி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நலன்களுக்கு எதிரானது எனக் கூறி அச்சமூகத்தினர் ரக்ஸôல் அருகே உள்ள நேபாள-இந்திய எல்லையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், நேபாளத்துக்கு செல்லும் 70 சதவீத அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கவலை தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன், தனது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் மூலம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அத்தியாவசியப் பொருள்கள் செல்லும் வழித்தடத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் தடையை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது கவலை அளிக்கிறது.
தங்கு தடையின்றி போக்குவரத்தை இயக்குவது நேபாளத்தின் உரிமையாகும்.
நேபாளத்தில் உள்ள மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு விநியோகிக்க, தொண்டு நிறுவனங்கள் உணவு, உடை, எரிபொருள்கள், கம்பளிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை எதிர்நோக்கியுள்ளன.
போக்குவரத்துத் தடையால் அந்தப் பொருள்களை அந்த நிறுவனங்கள் பெறுவது பாதிக்கப்படும்.
எனவே போக்குவரத்துத் தடையை நீக்கி, அவ்வழியாக அத்தியாவசியப் பொருள்கள் செல்ல வழிவகை செய்ய அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என்று பான்-கி-மூன் வலியுறுத்தியுள்ளார்.